×

நெல்லை குன்னத்தூர் பொத்தையில் புதைந்திருக்கும் 3 ஆயிரம் ஆண்டு வரலாறு: தமிழர்களின் பழம் பெருமையை பறைசாற்றுகிறது

நெல்லை: நெல்லை மாநகருக்கு அருகே குன்னத்தூர் கிராமத்தில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பொத்தை ஒன்று உள்ளது. இந்த பொத்தையின் மீது ஏறி நெல்லை மாநகரின் அனைத்து பகுதிகளையும் பார்த்து ரசித்துவிட முடியும் என்பதால் பலரும் அங்கு செல்கின்றனர். ஒரு மினி சுற்றுலா தலமாக மாறிவரும் இந்த பொத்தையில் ஒவ்வொரு ஆண்டும் பலர் பொங்கல் விடுமுறையை குடும்பத்தினருடன் கழிக்கின்றனர். அதோடு, அங்கு உள்ள பெருமாள் பாதம், குகைப்பாறையில் செதுக்கப்பட்ட முருகன் வேல் உள்ளிட்டவற்றை வழிபட்டு வருகின்றனர். மத்திய தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குன்னத்தூர் பொத்தை பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இந்த பொத்தையை நெல்லை மன்னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியியல் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் தலைமையில், உதவிப்பேராசிரியர் முருகன் முன்னிலையில் 24 மாணவ, மாணவிகள் நேற்று பார்வையிட்டனர்.

இதில் பொத்தையின் அடிவாரத்தில் இருந்த 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டனர். மேலும் உடைந்த கருப்பு, சிவப்பு பானைகள், கைக்கோடாரி உள்ளிட்ட பல்வேறு வரலாற்று அடையாளங்களை மாணவ, மாணவிகள் பார்த்து அதன் பழமையை குறிப்பெடுத்துக் கொண்டனர். இதுகுறித்து உதவிப்பேராசிரியர் முருகன் கூறுகையில், ‘‘குன்னத்தூர் பொத்தையில் உள்ள ஈமத்தாழிகள் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தாழிகளும், இங்குள்ள தாழிகளும் ஒரே மாதிரியானவை. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் நீண்ட நெடிய பழங்கால பாரம்பரியம் இருந்தது என்பதற்கு இந்த குன்னத்தூர் பொத்தை மேலும் ஒரு சான்று ஆகும்.

குறிப்பாக இந்த பொத்தையின் அடிவாரத்தில் ஈமத்தாழி ஒன்று உள்ளது. இரண்டு பாறைகளுக்கு நடுவே குகை போன்ற அமைப்பு உள்ளது. அதில் பாறையில் செதுக்கப்பட்ட தமிழ்க் கடவுள் முருகனின் வேல் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தை இன்னும் அதிகமாக ஆராய்ச்சி செய்தால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அல்லது அதற்கும் பழமையான தமிழர்களின் கலாசாரம் என்ன? என்பதை இன்னும் தெளிவாக அறிய முடியும். தொல்லியியல் துறை மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் மேலும் ஆர்வத்தை தூண்டும் விதமாக குன்னத்தூர் பொத்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்’’ என்றார்.

தொல்லியியல் துறை முதுநிலை மாணவர்கள் கூறுகையில், ‘‘மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியியல் துறை இந்த ஆண்டுதான் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் துறையின் முதல் பேட்ஜ் மாணவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. அதேபோல் பல்கலைக்கழகம் சார்பில் தொல் பொருள் ஆய்வு நடந்த பல்வேறு இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. குன்னத்தூர் பொத்தையை நாங்கள் முழுவதுமாக பார்வையிட்டோம். பல்வேறு ெதால் பொருட்கள் தேடத்தேட கிடைக்கின்றன. அதே நேரத்தில் குப்பைகளும் அதிகமாக இருப்பதால் அரசு குன்னத்தூர் பொத்தையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

* ஒரே மாதிரியான முதுமக்கள் தாழி

குன்னத்தூர் பொத்தையில் உள்ள பழமையான ஈமத்தாழி ஆதிச்சநல்லூரில் கிடைத்ததைப்போல மூடியுடன் இருந்ததற்கான அடையாளத்துடன் காணப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வாழ்ந்த அனைவரும் ஒரே மாதிரியான ஈமச்சடங்கினை மேற்கொண்டதாகவும், இப்போது இருப்பது போல ஊருக்கு ஒரு சடங்கு என்ற முறை அப்போது இல்லை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.

* சுற்றுத்தலமாக மாற்ற கோரிக்கை

குன்னத்தூர் பொத்தை நெல்லை மாநகருக்கு அருகே இருப்பதால் பலர் அங்கு சென்று மாநகரின் அழகை ரசித்து வருகின்றனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த விளக்க பலகைகளை வைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும், அதன் மூலம் பழந்தமிழர்களின் பாரம்பரியம் இளம் தலைமுறையினருக்கு சென்றடையவதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லை குன்னத்தூர் பொத்தையில் புதைந்திருக்கும் 3 ஆயிரம் ஆண்டு வரலாறு: தமிழர்களின் பழம் பெருமையை பறைசாற்றுகிறது appeared first on Dinakaran.

Tags : Nellai Gunnathur ,Nellai ,Gunnathur ,Nellie ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு